Monday, March 3, 2008

வள்ளி



யன்னல் வழியாகப் தெரிந்த மின்கம்பத்தையொட்டி மழை பொன்சரடாக இறங்கிக்கொண்டிருந்தது. இருட்டுக்கும் ஈரச்சாரலுக்குமான ஒத்திசைவு, கையிலிருந்த புத்தகத்தில் கண்களை நிலைக்கவிடாமல் அடிக்கடி கூப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்பாவும் அம்மாவும் ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கப்போயிருந்தார்கள். என்றாலும் அம்மா அரைவிழிப்பில்தானிருப்பாள் என்பது தெரியும். என்னைப் பற்றிய யோசனைகள் அவள் படுக்கையைச் சூழ்ந்துநின்று பிசாசுகளைப்போல கூத்தடித்துக்கொண்டிருக்கக்கூடும்.
அவசரமாகக் கதவு தட்டப்பட்டது. ‘இந்நேரத்தில் யார்?’எனும் கேள்வியுடன் கதவுத் துவாரம் வழியாக எட்டிப் பார்த்தேன். ஒரே இருளாயிருந்தது. முன் விளக்கைப் போட்டதும் வள்ளியின் பதறிய முகம் தெரிந்தது. கதவைத் திறந்ததும் காத்திருந்தாற்போல விசுக்கென்று உள்நுழைந்தாள். அவளுடன் குழந்தையும் ஈரமும் கூடவே வந்தன. கீழுதடு கிழிந்து தடித்திருந்தது.

“மன்னிச்சுக்கங்க தாயி… இந்த ராத்ரில ஒங்களத் தொந்தரவு பண்ணிட்டேன்”

“பரவாயில்லை… உள்ள வா”

தரையில் அமர்ந்து அவள் அழவாரம்பித்தாள். தடித்த உதடுகளைக் கோணியழுதபோது தாடை இழுபட்டு முகம் இரண்டாகப் பிரிந்தாற்போல ஒருகணம் தோற்றம் காட்டியது. இறக்கிவிடப்பட்ட குழந்தை தாயின் முகத்தை பயத்தின் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தது. கறுப்பு நிற முகத்தில் வெளேரென்றிருந்த அதன் கண்கள் யாருடையவோ கவிதையொன்றை நினைவுபடுத்தின. மழை நனைத்த தலைமயிர் அங்குமிங்குமாகச் சிலும்பிக் குத்திட்டிருந்தது. அதன் சின்ன உடலில் பொருந்தாத சட்டையொன்று மாட்டப்பட்டிருந்தது.

சத்தம் கேட்டு அம்மா எழுந்து வந்தாள். எரிச்சலோ தூக்கக் கலக்கமோ முகம் சிடுசிடுவென்றிருந்தது.

“எதுக்கு இந்த ராத்திரியில நடு வீட்ல உக்காந்து அழுறே…?”

வள்ளி என்னைப் பார்த்தாள்.
“என்னம்மா இது…? அவளுக்கு எதோ பிரச்னை… அதான் வந்திருக்கா… நீங்க போய்ப் படுங்க”

இதற்கிடையில் வள்ளியின் காயங்கள் அம்மாவின் கண்களில் பட்டிருக்கவேண்டும். உள்ளறையை நோக்கித் திரும்பிச் சென்றாள்.
“ஊருக்கெல்லாம் இரக்கம் பாரு… உனக்குப் பாக்க யாருமில்லை”அம்மாவின் வார்த்தைகள் கூடம்வரை கேட்டன. அவளுடைய செவிகள் இனி அறையிலிருக்கா என்பதறிவேன்.

“முடியலைம்மா… சாய்ங்காலம் நல்லாத் தண்ணிய ஊத்திட்டு வூட்டுக்கு வந்து குடிக்க காசு கேட்டுச்சு. என்ட்ட ஏதுய்யா காசு… நீ என்னா கொணாந்து குட்த்தியான்னு கேட்டேன். போட்டு மிதி மிதின்னு மிதிச்சுட்டாம்மா… இங்க பாருங்க…”

நான் எதிர்பார்க்காத தருணத்தில் சேலைத் தலைப்பை விலக்கி ரவிக்கையை மேலேற்றி முதுகைக் காட்டினாள். அகல அகலமாய் முதுகு முழுவதும் நீலநிறப் பட்டைகள்… நடுவில் இளஞ்சிவப்பில் புடைத்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. சில இடங்களில் தோல் வெந்ததுபோல வழன்றுபோயிருந்தது.

“ஐயோ…!”வாய்விட்டுக் கத்திவிட்டேன் போலிருக்கிறது. அவளே அந்தக் கத்தலில் பயந்தாற்போல சடக்கென்று முதுகை மூடிக்கொண்டுவிட்டாள். தரையில் கிடந்த காகிதத் துண்டொன்றின் சரசரப்பில் கவனத்தைச் செலுத்தியிருந்த குழந்தை அதைக் கீழே போட்டுவிட்டு வள்ளியின் மடியில் தாவியேறி வீரிட்டு அழத்தொடங்கியது. அம்மாவின் முணுமுணுப்பு இப்போது கூடம்வரையில் வந்தது.

“செத்துப் போய்டலாம்னா இந்தப் பிஞ்சு மொகத்தை நெனைச்சா அது கூட முடியலைம்மா”

“பேசாமப் படு வள்ளி… காலைல பாத்துக்கலாம். சாப்பிட்டியா…?”

அவள் பிள்ளையை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டு என்னைப் பார்த்து இல்லையென்பதாய் தலையசைத்தாள். வலியிலும் பசிக்களைப்பிலும் கண்கள் உயிரிழந்திருந்தன. உள்ளே போய் நோவு எண்ணெயை எடுத்துவந்தேன்.

“இதைப் பூசிக்கிட்டு சாப்பிட வா… காலைல டாக்டர்ட்ட போலாம்”

அவள் தலையசைத்தபடி மருந்தோடு வெளிப்புறக் குளியலறையை நோக்கிப் போனாள். திருட்டுக்குணம், பொய் கிடையாது. இருந்தாலும் அம்மாவின் பார்வை அவளை உள்ளே ஒண்டவிடாமல் விரட்டிவிடும். நான் வேலைக்குப் போவதன் முன் விடிகாலையிலேயே வந்துவிடுவாள். பாத்திரம் துலக்கி வீடு வாசல் பெருக்குவாள். சமைப்பாள். நான் களைத்துச் சோர்ந்து வரும்வரை வயதான அப்பா-அம்மாவைக் கவனித்துக்கொள்வாள். அம்மாவின் அதட்டல் தாங்கமுடியாமற் போகும்போது, இருந்திருந்துவிட்டுக் குரலெழும்பும். அது தன்னை நியாயப்படுத்தி ஓயும். மற்றபடி அவளால் பிரச்சனை இல்லை. பிரச்சனையெல்லாம் அவளுக்குப் புருசனென்று வாய்த்தவனால்தான்.
நல்லவேளையாக சோற்றில் தண்ணீர் ஊற்றவில்லை. இரவு செய்த சப்பாத்தியும் இருந்தது. சாப்பாட்டை எடுத்துப்போட்டுக்கொண்டு சுவரோரம் உட்கார்ந்து அள்ளி அள்ளிப் போட்டாள். இடையிடையே குருவிக்குஞ்சுபோல குழந்தையும் வாயைத் திறந்து வாங்கிக்கொண்டது.

மழை பெய்தோய்ந்த காலை மகத்தானது. வீடுகள் பனிப்படலத்தின் பின்னணியில் சதுர வார்ப்புகளெனப் பொலிந்தன.
வள்ளி டாக்டரிடம் வர மறுத்துவிட்டாள்.

“பழகிப்போச்சும்மா…”என்றாள்.
எழுந்திருந்து வேலைகளைப் பார்க்க முயன்றவளைத் தடுத்துவிட்டேன். திரும்பி வரும்வரை படுக்கையிலிருந்து எழுந்திருக்கக் கூடாதெனக் கட்டளையிட்டுவிட்டு வேலைக்குப் போனேன்.

வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அம்மா வாசலிலேயே எனக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். முகத்தில் கலவரம்.

“என்னம்மா…?”

“மனுசனா அவன்… வந்தான்… ஓடுகாலி நாயேன்னு துடைப்பக்கட்டையால அடிச்சு வள்ளியைக் கூட்டிக்கிட்டுப் போய்ட்டான்”

எனக்குள் எங்கிருந்து அந்த ஆவேசம் வந்ததென்று தெரியவில்லை. கிளம்பிவிட்டேன். வள்ளியின் குடிசையையொட்டி சாக்கடை நாற்றத்தோடு மெதுநடை போட்டுக்கொண்டிருந்தது. பன்றிகள் குட்டிகளோடு மேய்ந்துகொண்டிருந்தன. நடுத்தெருவிலே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பையன்களின் கூச்சல் அவ்விடத்தை நிறைத்திருந்தது. தாயொருத்தி போதையில் வீதியில் வீழ்ந்து கிடந்த மகனை வீட்டிற்கு வரும்படி கையைப் பிடித்து மன்றாடிக்கொண்டிருந்தாள். அவன் அதுவொரு விளையாட்டே போல ‘தெய்வீகம்’ பொருந்திய புன்னகையோடு சாவதானமாகப் படுத்துக்கிடந்தான்.

வள்ளி குடிசையின் மூலையொன்றினுள் காய்ச்சலில் கிடந்து அரற்றிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் எழுந்திருக்க முடியாமல் எழுந்திருக்க முயற்சித்தாள். உடல் அவளைக் கைவிட்டது. படுக்கையிலேயே தள்ளாடி விழுந்தாள்.

“இங்கயெல்லாம் எதுக்கும்மா வந்தீங்க… அந்தக் கடங்காரென் என்னிய எப்டி நாசம் பண்ணியிருக்கான்னு பாக்க வந்தீங்களா?”

வெறிபிடித்தாற்போல சேலையை முழங்கால்வரை வழித்துக் காட்டினாள். கண்கள் கூசிப் பதறின. பாதத்திலிருந்து கெண்டைக்கால்வரை தீக்காயங்கள்… பச்சை இறைச்சியாகக் கிடந்தது தேகம். நீர் கோர்த்த கொப்புளங்கள் சாம்பல் நிறத்தில் ஊதிப்பெருத்திருந்தன. அவளைச் சுற்றி ரணவாடையடித்தது. தலை சுற்றியது. வயிற்றுக்குள்ளிருந்து பயம்போல ஒன்று உருத்திரண்டு வந்தது. அவ்விடத்திலிருந்து ஓடிப்போய்விடத் தோன்றிற்று.

“இவனையெல்லாம் என்ன பண்றது…? போலிசுல சொல்லிடலாம் வள்ளி. ஜெயில்ல போட்டு சோறு தண்ணி இல்லாம நாலு சாத்துச் சாத்தினாத்தான் இவன் திருந்துவான்… நீ கௌம்பு முதல்ல போய்க் கம்ப்ளெய்ன்ட் குடுக்கலாம். அப்புறமா டாக்டர்ட்ட போலாம்… ”

“ஆஸ்பத்திரிக்கு வரேங்கம்மா… போலிசு வேணாம்” குரலெழுப்பத் தெம்பில்லை அவளுக்கு.

“இவ்வளவு கொடுமைப்படுத்துற புருசன் மேல அவ்வளவுக்கு இருக்கா உனக்கு?”வெடித்த குரலில் கேட்டேன்.

“எம் புள்ளயக் கொன்னுருவாம்மா…!”
விக்கித்துப் போய்ப் பார்த்தேன்.

“ஆமாங்கம்மா… அந்தப் புள்ள தனக்குப் பொறக்கலேன்னுதான் இத்தனை ரவுசும் பண்றாங்கம்மா… அதும் மூக்கு எம் மச்சான் சாடைல இருக்காம்”

“அடி செருப்பால…”

“என்னியத்தான்மா அடிக்கணும்”அவள் அழவாரம்பித்தாள்.

“எம் மேல எம் மச்சான் உசுரா இருந்தான். இந்தக் கயவாணிப் பயபுள்ள வளையல் விக்கிறேன்னு ஊருக்குள்ள நொழஞ்சான். என்ன மாய மந்திரம் செய்ஞ்சானோ ஒருநா வௌரந் தெரியாம இவங்கூட படுத்துட்டேன். ஒடம்பு ருசில கௌம்பி ஓடியாந்துட்டேன்மா… ஊர்ல எங்க நயினாவுக்கு வௌசாயந்தான் பொழப்பு… நெலமெல்லாம் கெடக்கு. இங்ஙன நாங் கெடந்து நாயா சீரழியுறேன்”

“கொழந்தை எங்க காணல?” ஞாபகம் வந்து கேட்டேன்.

“இவங் கோராமைக்குப் பயந்து பக்கத்து வூட்ல கொண்டுபோயி வெச்சிருக்காங்கம்மா..”

வள்ளியைக் கைத்தாங்கலில்; ஆட்டோவில் ஏற்றினேன். குழந்தை கையிலிருந்த பிஸ்கெட்டை ஆட்டி ஆட்டி பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ‘டாட்டா’காட்டிவிட்டு எங்களோடு வந்தது. காலிலிருந்த கொப்புளங்கள் நசிபட்டிருக்கவேண்டும். உதட்டைக் கடித்து வலியின் உக்கிரத்தைப் பொறுத்தபடி வந்தாள். குழந்தையின் கண்களில் ஆட்டோவில் போகும் மகிழ்ச்சி மின்னியது.

டாக்டருக்கு வள்ளியைத் தெரிந்திருந்தது. அவளைக் கண்டதுமே சிடுசிடுத்தார்.
“என்னா… இன்னிக்கு ஒடம்புல எந்தப் பாகத்தைக் கொதறி வைச்சிருக்கான்?”
அவள் கால்களைக் காட்டினாள். முதுகைத் தொட்டுத் திருப்ப, வலியில் முனகினாள்.

“முதுகுல என்ன…?”

திறந்து காட்ட… பதறிப் பின்னடைந்தார். ரணத்திலிருந்து ரவிக்கையைப் பிரித்தெடுக்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. உடல் அழுகிய நாற்றமொன்று அவ்விடத்தை நிறைத்தது. டாக்டரின் இறுகிய முகத்தில் சிறு இளக்கம் தோன்ற என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் கேட்டார்.

“நீங்களாவது ஏதாவது பண்ணக்கூடாதா?”

“இவள் ஒத்துழைக்க வேண்டுமே டாக்டர்”

என் மடியில் உட்கார்ந்திருந்த வள்ளியின் குழந்தை என் தலைமயிரை வாய்க்குள் இழுத்து இழுத்துச் சுவைக்க முயன்றது. அதன் பஞ்சு விரல்கள் கன்னத்தில் உராய்ந்தபோது வாஞ்சை பெருகியது. தன்னை முன்னிட்டே தாய் உயிரைத் தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை அறியாத அந்தக் குழந்தையை இறுக்கிக்கொண்டேன்.

வீட்டிற்குத் திரும்பும் வழியெல்லாம் வள்ளி ‘உங்களுக்குச் சிரமம்’என்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொல்லியபடி வந்தாள். புருசன் என்ன சொல்லிக் கூப்பிட்டாலும் போவதில்லை என்று சத்தியம் செய்தாள். பிள்ளையை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்றாள். ‘ஒனக்காச்சும் அடிக்காத புருசன் வரணும்’என்று செல்லம் கொஞ்சினாள்.

அவளுடன் வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மா ஒன்றும் பேசாது உள்ளே போய்ப் படுத்துக்கொண்டாள். அந்த மௌனத்தை வள்ளியின் மீதான இரக்கமாக எடுத்துக்கொள்வதா… என்மீதான கோபமாக எடுத்துக்கொள்வதா என்றெனக்குத் தெரியவில்லை.

வள்ளிக்கு சற்று தள்ளி கூடத்திலேயே மெத்தையைப் போட்டுப் படுத்துக்கொண்டேன். வலி மறந்து உறங்குவதற்காக அவளுக்குத் தூக்கமாத்திரை கொடுக்கப்பட்டிருந்தது.

“அம்மா…”

“என்ன…?”

“ஒங்க புருசனும் அடிப்பாராம்மா…?”

“இல்லையே…”

“பின்னே எதுக்காக அவரை வுட்டுட்டுத் தனியா இருக்கீங்க?”

அவளது கேள்விக்குப் பதிலளிப்பதா வேண்டாமா என்ற எண்ணம் எனக்குள் ஓடியது. ‘இவளுக்கென்ன பதில் சொல்வது’ என்று நான் யோசிப்பதாக அவள் எடுத்துக்கொண்டால் என்ன செய்வதென்ற நினைவில் சொன்னேன்.
“எனக்கு கல்யாணமாகி பன்னண்டு வருசமாகியும் கொழந்தை இல்லை வள்ளி”

அவள் விருட்டென்று எழுந்திருந்தாள். மங்கிய விளக்கினொளியில் அவள் கண்களில் ஈரத்தைப் பார்த்தேன்.

“அது ஒங் குத்தமா தாயீ…! ஒம் மனசுக்கு…”அவள் முடிக்கமாட்டாது விசும்பியழுதாள். அவள் கண்ணீர் எனக்கு ஏதோவொரு வகையில் ஆறுதலாக இருந்தது. முதற்தடவையாக அவளுக்கும் எனக்கும் இடையில் இருந்த மெல்லிய கோடும் அழிந்துபோனதாக உணர்ந்தேன். அவள் வள்ளி என்கிற பெண்… நான் கீர்த்தனா என்கிற பெண்.

“அவர் நல்லவர்தான். அவங்கம்மா பேச்சைக் கேட்டு…”

அடுத்து அவள் செய்த காரியத்தில் நான் பதறிப்போய் எழுந்திருந்தேன். தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி என் காலடியில் போட்டாள். ‘எடுத்துக்கங்கம்மா’என்றாள்.

“நீ கண்ட சினிமால்லாம் பாத்துட்டு இப்பிடிப் பண்ணாத… பேசாம தூங்கு வள்ளி”
“இல்லம்மா… இந்தப் புள்ளைக்கு அந்தாள் ஒரு நாள்கூட ஒரு பன் வாங்கியாந்து குடுத்ததில்லைம்மா… ஒரு சொட்டுப் பாலுக்குக் கூட காசு தரமாட்டான். இது என்னோட மார்பை உறிஞ்சிப் பாத்து ஏமாந்து எம் மூஞ்சியைப் பாத்து அழும். பாதி நாள் இதுக்கு பச்சைத்தண்ணியத்தான் குடுத்து ஏமாத்தியிருக்கேன். டீத்தண்ணி வாங்கிக் குடுக்கக்கூட காசிருக்காது தாயீ…! கல்லாவது தூக்கப் போலாம்னா இந்தப் பச்ச மண்ண யாரு பாத்துக்குவாங்க…? புள்ளயப் பெத்தா மட்டும் போதாது. அதுக்கு வயிறாரக் கஞ்சி ஊத்தணும். வக்கத்தவளுக்கு ஏன் தாயீ புள்ளயும் குட்டியும்…”
மருந்து வேகத்தில் அவள் பிதற்றுகிறாள் என எண்ணினேன்.
தூக்கம் கண்ணை ஒரு புகை போல வந்து மூடியது. வள்ளியின் குரல் என் கனவுகளில் அலைந்தது. அவளது மார்பிலிருந்து இரத்தம் பெருக்கெடுப்பதாக கனவு வந்தது.
காலையில் குழந்தையின் குரலில் விழித்தேன். அது தாயருகில் படுத்திருந்து மழலையில் பேசிக்கொண்டிருந்தது. மணியைப் பார்த்தேன். ஏழரையாகியிருந்தது. ஏதோவொரு உள்ளுணர்வின் உந்துதலில் வள்ளியைத் தொட்டுப் பார்த்தேன். காய்ச்சல் அனல்பொரிந்துகொண்டிருந்தது.

அள்ளிப்போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.

ஜன்னி முற்றிவிட்டதாகச் சொன்னார்கள். ‘அடிக்காதய்யா… அடிக்காதய்யா..’ என்று கண்மூடிக் கிடந்து பிதற்றினாள். அருகில் ஆளசைவு தெரிந்தால் ‘எம் புள்ளையக் காப்பாத்துங்க’என்று கையெடுத்துக் கும்பிட்டாள். மூன்றாம் நாள் பகல் நான் குழந்தையோடு வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டுத் திரும்பிவந்து பார்த்தபோது, வள்ளியின் மூச்சு நின்றிருந்தது. வலிகளிலிருந்து விடுதலை பெற்ற நிறைவில் விழி மூடிக்கிடந்தாள். அவளது மரணச் சான்றிதழில் ‘ஜன்னி கண்டு மரணம்’என்றே எழுதப்படக்கூடும். கொலைகளும் தற்கொலைகளும் இயற்கை மரணங்களாகிவிடுவதன் மீதான வியப்பும் கசப்பும் என்னுள் மண்டின.

சக்கரம் பூட்டிய கட்டிலில் வள்ளியைக் கிடத்தி பிணவறைக்கு எடுத்துச் சென்றபோது வாசல்வரை கூடவே நடந்துபோனேன். அப்படிக் காலகாலமாக நடந்துகொண்டிருப்பதான பிரமை நெஞ்சில் தோன்றி ஒருகணம் மனதை உறையவைத்தது.





Labels:

1 Comments:

At March 24, 2008 at 9:49 AM , Blogger சின்னக்குட்டி said...

அருமையான சிறுகதை ...பதிவுக்கு நன்றிகள்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

[Valid Atom 1.0]